Pages

நான் ஒரு முட்டாளுங்க...

தினம் தினம்
உந்தன் விழியாலும்
உந்தன் மொழியாலும்
என்னை புத்தியற்றவனாக
ஆக்குகின்றாய்...
இன்று ஏனோ?
புதிதாய் என்னை
மடையனாக மாற்றுவதுபோல்
முட்டாள்தின குறுஞ்செய்தியை
அனுப்புகின்றாயே?

- sure

அழைப்புமணி...

உன்னை நான்
பெயர்சொல்லி அழைக்குபோது...
என்னை நீ
திரும்பிபார்க்காமல் அலட்சியம்செய்து
சென்றாலும்...
உன்பெயரை உச்சரித்ததை
உலகின் இன்பமாய்
மனதுக்குள் நினைப்பதை
போன்றே...
கைபேசியில் என்அழைப்பை
நீதீண்டாமல் போயிருந்தாலும்
உன்னைநான் அழைக்க
அழைப்புமணியாய்...
ஒலித்த உன்விருப்பமான
திரைப்பாடல் உன்குரல்
கேளாதகுறையை என்னுள்
தீர்க்குதடி...
- sure

அமாவாசை...

அமாவாசை!!!
நேற்று விண்ணில்
மட்டுமல்ல நான்
கண்டது!
எந்தன் அலைபேசியிலும்
கண்டேன்...
நிலா இல்லாத
வானம் போன்றே
உந்தன் அழைப்பும்
குறுச்செய்தியும் இல்லாமல்
வெறுச்சோடி போனது
கைபேசியும்....

- sure

மெளனம்...

உனக்கு மட்டும்தான்
மெளனம் பேசதெரியுமென்று
எந்தன் மனதுக்குள்
நினைத்திருந்தேன் இன்றுவரை
ஆனால்
உந்தன் அலைபேசிக்கும்
நன்றாக பயிற்றுவித்திருக்கிறாய்
என்னோடு பேசாமல்
மெளனம் காத்திடும் - யுக்திகள்
எவ்வாறென்று என்பதனை...
-sure

தவிப்பும்... இறப்பும்...

நான் பயணிக்கும்
பேருந்தும் போக்குவரத்து
நெரிசலில் சிக்கிதவிப்பது
போன்றே என்மனதும்
பலநேரம் அலைபாய்கிறது...
உனக்காக நான்
அனுப்பிய குறுச்செய்திக்கு
மறுபதில் உன்னிடமிருந்து
எதிர்பார்த்து வராதசமயங்களில்...
சிலநேரங்களில்...
நீபார்த்தும் பதிலேதும்
அனுப்பாமல் போனாலும்
போக்குவரத்தின் விபத்தில்
சிக்கிஇறந்து போயிருக்க
கூடுமென்று எண்ணியே
என்மனம் என்னை
சமாதானம் செய்துவைக்கிறது...

என் விடியல்...

அன்று...
பொழுது புலர்ந்ததை
சேவல் கூவியது
கேட்டு ரசித்து
துயில் எழுந்தேன்!

பின்....
கடிகாரத்தின் மணியோசை
காதினில் ஒலித்திடவே
விடியலை அறிந்து
தூக்கத்தை கலைத்தேன்!!

இன்றோ....
உந்தன் குறுஞ்செய்திகள்
வந்து எழுப்பினால்
மட்டுமே பொழுது
விடிவதாய் உணருகிறேன்!!!

ஆனால்...
மூடுபனிகாலத்தில் கூட
பொழுதுகள் அதிகாலையில்
விடிந்தது சுகமாய்...
இளவேனிற்காலத்தில் ஏனோ
பொழுதுகள் விடிய
தாமதமாகி போகின்றது...
சிலநாட்கள் விடியாமலே
போவதையாவது நீயறிவாயோ?

- sure

சொல்லாத வார்த்தைகள்...

இவ்வுலகம் நிலவில்லாத வானமாய்
இருண்டு நீண்டு போனதுபோல்...
உன்னுலகமும் கண்களும் கண்டிப்பாய்
இருண்டு தூங்காமல் போயிருக்ககூடும்...

உன்அலைபேசியும் என்குறுஞ்செய்திக்கு காத்திருந்து
உறக்கத்தை இழந்திருக்ககூடும்...
என்அலைபேசியும் என்மனமும் அனுப்பாது
இறந்துபோவதை நீயறிவாயோ?

என்மனதில் என்னவென்று நீயென
உன்னிடம் சொல்லிட எண்ணம்தான்
உன்மனதில் வண்ணத்தை படைத்தால்
என்மனம் தாங்கும் ஒருவேளை
பின்னத்தை கொடுத்தால் தாங்குமோ?

- sure

என்னுயிர் பிரியுதடி...

எந்தன் அலைபேசியில் புதிதாய்
எனக்குநீ அனுப்பும் குறுஞ்செய்திகளை
சேகரிக்க இயலாமல் முன்புநீ
என்றோ அனுப்பிய குறுஞ்செய்திகளை
ஒவ்வொன்றையும் நானாக நீக்கும்போது
என்மனதுக்குள் நடைப்பெறும் போராட்டத்தையும்
உயிர்விடுவதையும் எந்தவகையில் நீயறியக்கூடும் - நான்
வார்த்தையில் இவ்வாறு சொல்லாவிடின்...

அப்படியிருக்க பின்னெப்படி சாத்தியம்
எந்தன் உயிர்தோழியே உன்னை
என்மனதுக்குள் இருந்து நானாக
அகற்றிட நினைப்பது என்வாழ்வில்?
அகற்றிவிட நினைத்தாலும் என்னால் - ஒருவேளை
இம்மண்ணில் உயிர்வாழ முடியுமா?
- sure

என்னுள் நீ...

என்னுயிர் தோழியே...

ஓன்றா? இரண்டா? நீயென்றால் எனக்குள் ஞாபகம்வர
எத்தனையோ உண்டு எதைச்சொல்லி எதை விடுவேன்...

கண்களை மூடி நான் சுவாசிக்கும் காற்றும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் வாசிக்கும் கவிதையும் நீயல்லவா....

கண்களை மூடி நான் மெய்மறக்கும் இசையும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் ரசிக்கும் மழையும் நீயல்லவா...

கண்களை மூடி நான் கேட்கும் அலையோசையும் நீயல்லவா..
கண்களை திறந்து நான் படிக்கும் அலைபேசியும் நீயல்லவா...

கண்களை மூடி நான் தூங்கும் காலையும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் வியக்கும் மாலையும் நீயல்லவா...

கண்களை மூடி நான் தேடும் நினைவும் நீயல்லவா...
கண்களை திறந்து நான் காணும் கனவும் நீயல்லவா...

கண்களை மூடி நான் நினைப்பதெல்லாம் நீயல்லவா
கண்களை திறந்து நான் காண்பதெல்லாம் நீயல்லவா....

- sure

இன்று போல் என்றும் இருக்குமா?

பிறந்திருக்கும் புத்தாண்டில் மனதுக்கு
பிடித்தவர்களோடு பேச நினைத்தாலே
உள்ளம்தானாக விண்ணில் பறக்கும்...

இருவரும் பேசும் சமயத்திலோ
விண்ணும் இடிந்து விழுந்தாலும்
நெஞ்சம் அறியாமல் போகும்...

தொலைவில் இருந்தாலும் பேசும்
மொழிதனில் அகம் மகிழ்ந்து
அமிர்தமும் சுவையற்று போகும்...

பக்கத்தில் அமர்ந்து பாயசமுண்டு
புத்தாண்டை கழிப்பதை விடவும்
இதயத்திற்குள் சந்தோஷம் பொங்கும்...

உதட்டில் வார்த்தைகளாய் அல்லாது
உதிர்த்து விட்ட மெளனமல்லாத
மொ(மு)த்தபூவும் தேனாய் இனிக்கும்...

செவியில் உணர்ந்த உண(ர்)வு
உதிரத்தில் கலந்து உடல்முழுதும் - என்றென்றும்
பரவசம் அடைய செய்கிறது....

- sure

தெரியாது... ஆனால்!!! இன்று...

இதயத்தில் பூத்துவிட்ட காதலின்
அடையாள சின்னமோ என்னவோ?
தெரியாது.... ஆனால்!!! இன்று...
நீயுமென்னை ரசிக்க வேண்டும்
என்பதற்காகவே பலமணி நேரம்
கண்ணாடியின் முன்பு என்னை - நானே
ரசிக்க தொடங்கிவிட்டேன் புதிதாய்...

நீசெல்லும் வழியில் பின்திரும்பி
எதற்காக பார்த்தாயோ என்னவோ
தெரியாது.... ஆனால்!!! இன்று...
நீயெனக்காவே திரும்பியிருக்க வேண்டும்
என்பதற்காகவே தினமும்வந்து நிற்கிறேன்
உன்பார்வை மீண்டும் ஒருமுறை - கிடைக்காதயென
காத்திருக்க துவங்கிவிட்டேன் புதிதாய்...

நாளை அடைந்திடும் முன்னேற்றத்திற்கு
பள்ளிதேர்வுகளை படித்தேனோ என்னவோ?
தெரியாது.... ஆனால்!!! இன்று
உன்னோடு பேசிமகிழ வேண்டும்
என்பதற்காகவே கவிதைகளையும் படிக்க
கணினியின் தேடலில் நானே - என்னை
மூழ்கடிக்க ஆரம்பித்துவிட்டேன் புதிதாய்...

புதிதாய் மலர்ந்த பருவமோ
காரணம் அதுவோ? என்னவோ?
தெரியாது.... ஆனால்!!! இன்று...
என்வாழ்வில் நீசெய்திட்ட மாயமோ
என்னுயிரில் எப்படியோ? எவ்வாறோ?
ஓவ்வொரு நிமிடமும் நான் - இவ்வுலகில்
உனக்காக பிறக்கின்றேன் புதிதாய்...
- sure

என் காதல்...

பெண்ணே!!!
உன்மீது நான்கொண்ட அன்பினை
சொல்லிவிட எத்தனையோ வழியிருந்தும்
உன்னிடம் வார்த்தையால் நான்நேரில்
என்காதலை சொல்விட முடியாமல்...
ஊமையாய் என்னிதயம் வலிக்கின்றது
ஒருவேளை நான் ஊமையாக
பிறந்திருந்தாலும் உன்னை கண்டசமயம்
தைரியமாக கைஅசைவுகளில் சொல்லி
என்காதலுக்கு மறுமொழியாய் உன்னுடைய
கண்அசைவை பெற்றிருக்ககூடும் வாழ்வில்...
புரியாதமொழியில்கூட புரியவைக்க கூடும்காதலை
புரிந்தயென்னை நீபுரிந்துகொள்ளாமல் போவதேன்...

- sure

மழை... நீ... நான்...

மழையே!!!
நான் உன்னை
என்றும் காதலிப்பேன்
நீ என்னை
இன்று காதலிக்காவிடினும்...

நான் உனக்காகவே
ஏங்கி காத்திருக்கேன்
நீ என்னை
காணவராமால் போனாலும்...

கொட்டும் மழைக்காலத்திலே
நீ வருவதில்லை
கோடையில் பின்னெப்படி
நீ வரக்ககூடும்...

நம்பிக்கை மட்டும்தான்
என்னுள் நிலையாய்
நீயுமென்னை கண்டிட
ஒருநாள் வருவாயென...

மழையை மட்டும்
நான் காதலிக்கவில்லை
மங்கை உன்னையும்
தான் காதலிக்கிறேன்...

இதயத்தில் மொட்டுவிட்டு
இதழில் பூக்காமால்
இன்றுவரை என்னுள்
இருக்ககூடும் காதல்....

உள்ளத்தில் விதையாகி
உதட்டில் விருட்சமாய்
உன்னிடம் சொல்லதுடிக்குது
உன்மீதான என்காதல்...

என்றாவது உன்னிடம்
சொல்லி விடக்கூடும்
அன்று உன்அன்பை
முத்தத்தில் சொல்லிவிடு...

எனக்கு மழையே
வேண்டாம் வாழ்நாளில்
எனக்கு கன்னத்தில்
நீகொடுக்கும் ஒன்றேபோதும்...

சிறுதுளி பெருவெள்ளம்
உந்தன் ஓர்முத்தமோ...
எந்தன் நெஞ்சிக்குள்
பெய்திடும் மாமழை...

வான்மழையும் என்னை
நனைக்காமல் பொய்க்ககூடும்
உன்அன்பின் மழையோ - என்னை
நனைக்காமல் போகுமா?
- sure

என்னை தீண்டா முத்தம்...

பேசும்போது நீயெனக்கு
அளித்திட நினைத்து
பரிமாறி கொள்ளபடாத
முத்தங்களின் கணக்கை...

உரையாடி முடிந்தபின்
அலைபேசிக்கு மொத்தமாக
வாரிவாரி வழங்குகிறாய்..
எனக்கு கொடுத்திருந்தாலோ
ஒன்றினை மட்டும்தானே
கொடுத்து இருப்பாய்...
அலைபேசியை தீண்டும்
முத்தங்களின் எண்ணிக்கையோ
எல்லையற்று படருகிறது...

உந்தன் தீண்டாத
முத்தமும் என்னை
மெய்மறக்க செய்கிறதடி...
- sure

கட்டைச்சுவர் சுவரும் தாஜ்மஹால் தான்



நம்முடைய மனதுக்குள்

கொண்ட காதல்
மட்டும் இல்லையடி
பெண்ணே...
வானம் வரை உயராமல்
பாதியிலே நின்றுபோனது
உனக்காக நித்தம்
காத்திருந்த இடமும்தான்...

இன்றும் நம் இதயத்திற்குள்
வாழ்ந்திட்ட காதலை
மறவசெய்யாத ஓர்
உன்னதமான அழியாத
நினைவின் சின்னமாக
இப்பூமியில் மற்றொரு
தாஜ்மகாலை போன்று
என்கண்களுக்கு...
இந்த கட்டைசுவர்...

நாணம்

cute girl

உன்னுடைய அலைபேசி
உந்தன் வெட்கத்தோடு
போட்டி போடுகின்றதோ
இல்லை...
உன்னிடம் கற்றுக்கொள்கிறதோ!!!

உந்தன் கன்னம்
சிவக்கும் முன்பே
அணைந்து போகின்றது
எந்தன் முத்தங்களை
பெற்றவுடனேயே.....

அன்பு...காதல்... காமம்...

நீ!!!
அலைமகளோ
மலைமகளோ
கலைமகளோ
என்றுதெரியாது?

உன்இதயத்திற்குள் அவனை மெல்லஅடைத்து
உன்இல்லத்தின் கதவினை திறந்துவைத்திருக்கிறாய்
தென்றல்காற்றாய் உன்னை வந்துசேர்ந்திட
அவன்மனதுக்குள்ளும் இருக்கும் ஆசையையுணர்ந்து...

காற்றினைவிட நீஅவனுக்கு ஏந்திட
மென்மையானவள் என்று நிருபிக்கவும்
காற்றினையும் கையில் பிடிக்கமுடியும்
என்பதனை செயலில் செய்துகாட்டவும்

அவனிரு கரங்களில் அள்ளியெடுத்து
உன்னை அரவணைத்து சுமக்கசொல்கிறாய்
உன்செவியில் அவன்குரலில் இதமாய்
மெல்லிசை பாடலை ஒலிக்கசொல்கிறாய்...

கையில் மிதக்கும் கனவாநீ
கை கால் முளைத்த காற்றாநீ
கையில் ஏந்தியும் கனக்கவில்லையே !
நுரையால் செய்த சிலையநீ 

ஒருபாடல் உன்னை பார்த்து அவன்பாட
மூன்றுபாடல் அவனை பார்த்து நீபாடுகிறாய்
ஒரேமுறை பார்த்தாலே போதும் என்கிறாய் - அவன்
உன்அன்பை என்னவென்று எண்ணிவியந்து போகிறான்

// நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு // என்கிறாய்....
//ஒன்றா இரண்டா ஆசைகள் எல்லாம் சொல்லவே// என்கிறாய்
//உனக்கென நான் எனக்கென நீ... நினைக்கையில் இனிக்குதே// என்கிறாய்...
எல்லாம் கனவாக வந்துசென்றாலும் மகிழ்ச்சியென்கிறாய்...

இருவரும் பார்க்காமல் போனாலும் போகக்கூடும்
ஒருவரையொரு புரிந்துக்கொண்டது மட்டும் போதுமென்கிறாய்
ஒருமுறைகூட வாழ்வில் சந்தித்தது இல்லை
மறுமுறை வாழ்வில் சந்திப்பதைபற்றி சிந்திப்பதற்கென்கிறாய் ...

நீயொரு பெண்ணாக
அவனொரு ஆணாக
உங்கள் உணர்வுகள் - இடம்மாறிக்கொண்டு
உங்கள் மனதுக்குள்....

வா(ட்)டியது மனம்...

பெரிய மேம்பாலம்
சிறிய துவாரம்
அழகிய மைனாவின்
உயரிய கூடு...

பலநாட்களுக்கு முன்பு

பிறந்திருக்க வேண்டும்
அந்த மைனாகுஞ்சு...

இன்றுதான் முதன்முறையாக

பறந்திட முயற்சியும்
செய்திருக்க வேண்டும்...

சிறகை விரித்து

மெல்ல பறந்தது
நெரிசல் நிறைந்த
சாலைக்கு மேலே...

மேலும் முடியாமலோ

பறக்க தெரியாமலோ
சாலையின்மீதே விழுந்துவிட்டது
கண்ணிமைக்கும் நேரத்தில்...

இரண்டு வாகனம்

மட்டும் ஒவ்வொன்றாய்
அதன்மேலே ஏறாமல்
எப்படியோ சென்றது...

என்னுடைய வாகனம்

பக்கத்தில் கடந்தது
மெதுவாக அதற்குள்
என்னையும் நகர்த்திவிட்டது...

என்மனம் இன்னும்

கடக்காமல் அங்கேயே!!!
அதனுடைய நிலையெண்ணி
நான் செய்வதறியாது...

வாகன நெரிசலிருந்து

தொலைந்து வந்தது
வாகனம் மட்டுமே - என்னிதயமோ
தொலைந்தது அவ்விடமே...

மீனும் நீரும்.. நானும் நீனும்

மீன் நீரிடம் சொல்லியது....
நான் அழுவது
tamil Kavithai
தரையில் இருக்கும்
மனிதர்களுக்கு அல்ல
உன்னால் வாழும்
உனக்கும் தெரியாதென்று....

நீர் மீனிடம் சொல்லியது...
நீ அழுவது
எனக்கு புரியும்
கண்டிப்பாக... ஏனெனில்!
நான் வாழ்வது
வேண்டுமானால் உன்னோடு...
நீ வாழ்வதோ
என் இதயத்திலென்று...

அப்படிதான்....
நான் எழுதுவது
மற்றவர்களுக்கு கூட
புரிகிறதே உனக்கு
புரியாமல் போனதேனோ?
என்றிருந்தேன் எனக்குள்...

இன்றுதான் தெரி(ளி)ந்தேன்
உன் இதயத்தில்
வாழும் என்னை
எப்படி நீயறிந்துகொள்ளாமல்
விலகி இருக்ககூடுமென்று...

இது ஒரு குறுஞ்செய்தியின் தாக்கம்...

நிலவின் நேசம்... அங்கே என் வாசம்...

நிலவின் ஒளியாக
என்னைவந்து சேருகிறாய்
உன்னாலே
நானும் என்வரிகளும்
புத்துயிர் பெறுகிறோம்
தென்றலாய் பிறக்கிறோம்.

என்னை நீகாண
நிலாவாய் நித்தம்
வானிலும் என்மனதிலும்
உலா வருகின்றாய்
நான் உன்னை
கண்டு ரசித்திட...

உன்னை நான்காண
தென்றலாய் மாறி
பூக்களிலும் மேகத்திலும்
கலந்து காற்றாய்
வீசி வருகிறேன்
உன்னை தீண்டிட...

நிலவாய் என்னை
நோக்கி நீ
விண்ணிலிருந்து பயணிக்கிறாய்...
தென்றலாய் உன்னை
எதிர்நோக்கி நான்
மண்ணிலிருந்து பயணிக்கிறேன்...

மௌன பேச்சுவார்த்தை..

நித்தம் நித்தம்
இனி வேண்டும்
நமக்குள் சண்டை
உன்னுடன் பேசும்
தருணத்திலும் சரி
உன்னை நினைக்கும்
எல்லா பொழுதிலும்
சமரசத்தை மட்டும்
உனக்கு தொடர்ந்து - என்வாழ்வில்
வழங்கிட நினைத்துக்கொண்டேன்...

உன்குரல் என்றால் தேன்....

தேன் என்றால் இனிப்பு ஞாபகம்
இனிப்பு என்றால் உந்தன் ஞாபகம்
நீ என்றால் உன்நினைவுகள் ஞாபகம்
என்றென்றும் கெட்டுபோகாத தேன்போல
என்றும் என்மனதுக்குள் உன்நினைவுகளும்
இனித்து நாளுக்குநாள் பெருகிக்கொண்டே...

- sure

என்மடியில் பூத்த நிலா (பூ)....

பகல்பொழுது விடியும்வரை
என்விழிகள் விழித்திருக்கவில்லை
எந்தன்மடி மீதினில்நீ
தலைசாய்த்து இருந்தபோதும்
என்விழிகளும் என்னைமறந்து - தானாய்
ஏனோதுகில் கொள்ளதொடங்கியது...


சிலமணி நேரங்கள்
நம்முதடுகள் நம்முடைய
வாழ்வின் நிகழ்வுகளை
பகிர்ந்துகொண்டே இருக்க
என்உதடுகள் உன்நெற்றியில் - புள்ளியாய்
கோலம்போட தொடங்கியது...


இடக்கைவிரல்கள் இடையிடையே
உச்சம்தலை வரைகேசத்தை
நேசமாய் வருடிகொண்டிருக்க
வலக்கைவிரல்கள் உன்இடக்கை
விரல்களோடு பத்தாக - ஒன்றாய்
மெல்ல இணையதொடங்கியது...

இரவின் நிசப்தம்எங்கும்
நமக்குள்ளும் படரதொடங்கியது
அப்பொழுது புரியவில்லை
பின்புதான் அறியநேர்ந்தது
இணைந்தது நம்மிதழ்களும் - மென்மையாய்
நம்மையறியாமலே என்பதனை...

- sure

நீவருவாயென...

சூரியனைபார்த்து மலரும்
செந்தாமரை மலராய்
அல்லாமல்...

உந்தன் முழுமுகம்
புதைத்து துயர்வின்றி
உறங்கவைக்க...

நிலாவே உனக்காக
என்மார்பும் பூத்து
காத்திருக்கிறது...

வெண்ணிலவே!!!
உறங்க வாரோயோ...
இறங்கி வருவாயோ
மயங்கி போவாயோ...

- sure

?????

மஞ்சத்தின் மீது
பஞ்சணையாய் நினைத்து
நெஞ்சத்தில் உறங்கும்போது
எந்தன் வலப்பகத்தில் - நித்தம்
தலைசாய்த்து துகில்கொள்...

ஏனெனில்!
உயிராக என்னிதயத்தில்
உள்ளேவாழும் நீயாகிய
உனக்கு மெல்ல
உந்தன் சிரமோ?
உந்தன் கரமோ? -
உரசினாலும்கூட வலிக்ககூடும்...


இல்லையேல்...
இடப்பகத்தில் ஒலிக்கும்
இதயதுடிப்பின் ஓசையாகிய
உன்பெயரே மெல்ல
உன்தூக்கத்தை கெடுக்ககூடும்...

- sure

மழையின் முத்தம்...

இன்றைய பொழுதின்
முடிவோ?
இல்லை...
நாளைய பொழுதின்
தொடக்கமோ?
கேள்விக்கு விடைத்தெரியாத
நேரம்!
பயணமும் வாழ்க்கையும்
நள்ளிரவில்...

என்னை நனைப்பது
உந்தன் மொழியின்
வார்த்தைகளா?
இல்லை....
பெய்யும் மழையின்
பொழியும் சாரலின்
துளிகளா?
ஈரமும் கதகதப்பும்
என்னோடு...

கார்மேகம் தூவிடும்
பூவிதழ்களாய் தூறல்
என்மேனியை கொஞ்சம்
கொஞ்சமாய் தீண்டிட...
தேன்சொட்டாய் ஒவ்வொரு
துளியும் உன்னைபோல்
என்னையும் மண்ணையும்
ஆக்கிரமிக்க தொடங்கிட...

எங்கிருந்தோ குறிவைத்து
எய்யபட்ட அம்பாய்
எங்கிருந்தோ பிறந்து
என்னுதட்டில் விழுந்து
என்னை அதுவும்
ஏகாந்தத்தில் வீழ்த்தியது
எனக்கு நீயளிக்கும்
முத்தத்தினை போல....

- sure

நண்பர்

ஒரேகருவறையில் பிறக்கவில்லை
ஈகரையில் இணைந்தோம்
அக்கறையை பகிர்ந்தோம்
எக்கரையிலோ இருந்தபோதும்...

இலங்கையில் பிறந்த
இராமன் நீ
இந்தியாவில் பிறந்த
விபிஷ்ணன் நான்

மதம் வேறாக இருக்கலாம்...
மனம் ஒன்றுதான் நமக்குள்...
எம்மதமும் சம்மதம்
எண்ணம் நமக்குள்...

நித்தம் பேசாமல்
போனாலும் உன்னோடு
பாசம் இல்லாமல்
போகாது என்னோடு...

கடல்கடந்து வாழ்ந்தாலும்
என்வாசமும் சுவாசமும்
நம்மை அறியாமலே
கலந்திருக்கும் காற்றினில்...

வாழ்வதற்கு பணம் தேவை...
வாழ்வில் குணம் தேவை...
வாழ்க்கைக்கு ஓர்துணை தேவை...
வார்த்தையில் பலமுறை கூறியவனே...

வாழ்வில் உனக்காவது
மணம் முடித்துகொள்ள
நான் ஆசைபடுகிறேன் - அதற்கு
உன்வரவினை எண்ணி...

- sure

யானையே!!!

நேற்றுவரை...
மைசூர் என்றால்
தசரா ஞாபகம்
தசரா என்றால்
உந்தன் ஞாபகம்

நீ என்றால்
உன்னழகு ஞாபாகம்
உன்னழகு என்றால்
காட்சிகள்பல ஞாபகம்

இன்றும்...
உந்தன் ஞாபகம்...
ஆனால் கொள்ளையடித்த
உன்னழகு கொலைசெய்ய
துவங்கியது ஏனோ?

காட்டை நாங்கள்
ஆக்கிரமிக்க தொடங்கியதால்
காட்டைகாக்கும் பொருட்டு
ஒருநாள் அடையாள
போராட்ட சின்னமாய்
நாட்டிற்குள் புகுந்தீரோ?
காட்டிற்குள் மரத்தை
முறிக்கும் நீங்கள்...
நாட்டிற்குள் வாகனத்தை
உடைத்தது ஏனோ?
செல்லும் பாதையில்
தடையாக இருந்ததாலோ? - எங்களும்
ரெளடிதனம் பண்ணதெரியும்
என்பதை காட்டவோ?

பணப்பெட்டி இயந்திரத்துக்கு
காவலன் அவன்...
உங்கள் தேவையது இல்லாதபோது
அவனை கொன்றதுஏனோ?
மனிதர்கள் நாங்கள்
பலபேர் மிருகமாகிறோம் - மிருகம்
நீங்கள் மனிதர்கள்போல்
மாறியதும் ஏனோ?

வாய்பேசும் மனிதனையும்
வாய்பேசா உன்னைபோன்ற
கால்நடையும் குத்தி
கொல்ல காரணமெதுவோ?

- sure

மலர் பேசும் வார்த்தைகள்...

அழகிற்காக என்னை
இறைவனும் பெண்களும்
சூடிமகிழ்ந்தாலும் எந்தன்
வாசனையில் மட்டும்தான்
பெருமை தெரிகிறது...
அழகாய் பிறந்தநாங்கள்
அத்தனை பேரும்
இறைவனையும் சேருவதில்லை
பெண்களும் சூடுவதில்லை...
உன்கைகளில் என்னைநீ
ஏந்திரசிக்கவே ஒருஇரவு
மட்டும் உயிர்வாழ்ந்தாலும் - உனக்காக
மலர்ந்திட துடிக்கிறேன்...

- sure

மனம் மாறிய வேளை...

என்கனவில் அவள் வந்தாள்
என்னருகில் மெல்ல அமர்ந்தாள்
என்னையே உனக்கு தந்துவிட்டேன்
உன்முன்னே நானடிமையென நின்றேன்...

என்னைபார்த்து என்னிடம் கேட்டாள்
என்னை என்னவெல்லாம் செய்யபோகிறாயென்று?
உன்னை என்னவெல்லாம் செய்யவேண்டுமென்று
சொல்லென்றேன் ஒவ்வொன்றாய் என்காதில்...

நாணலாய் வெட்கத்தில் தலைகுனிந்தாள்
பெண்ணினம் சொல்லிடமறுக்கும் பதில்தான்
ஆணினம் செய்திடநினைக்கும் செயல்தான்
என்றென மனதுக்குள் எண்ணிக்கொண்டேன்...

நீநினைக்கும் எந்தவொரு ஆசையையும்
நிறைவேற்றிட என்மனம் துடிப்பதையும்
இரட்டிப்பாய் செய்வித்து உன்னை
வீழ்த்திட நினைப்பதையும் அறிந்திடுஎன்றேன்...

என்விரல் பிடித்து
என்கேசம் கோதி
அவளிதழ் அசைய
தென்றல் காற்றாய்
எண்ணங்களை ராகமாக்கி
இசையாய் ஒலித்தாள்...

பட்டியல் முற்றுபெறும்
முன்னே என்னிதயத்தை
காகிதமாக்கிய வரிகளை
அவள்கையில் திணித்தேன்...

எந்தன் காகித்ததை பார்த்தாள்
எந்தன் கண்களை பார்த்தாள்
காதலை வார்த்தையில் சொல்லாமல்
அவளது பார்வையில் வைத்தாள்...

புணர்தல் இல்லாத காமம்
காமம் இல்லாத காதல்
காதல் இல்லாத அன்பு - இவையாவும்
ஒன்றென என்னையள்ளி அரவணைத்தாள்...

அவள்காட்டிய அன்பிற்கு
பரிசாய் முத்தமளித்தேன்
நான்காட்டிய காதலிற்கு
என்னை கட்டியணைத்தாள்

இதழோடு இதழ்மெல்ல சேர்த்தேன்...
முத்ததிற்குபின் கண்விழித்து பார்த்தேன்
அப்பொழுதுதான் தெரிந்தது எல்லாம்
இன்பமான கனவென்று இதயத்திற்கு..
- sure

கிரகணம்.............

நிலாவாய் உனக்கு நானிருக்க
கதிரவனாய் எனக்கு நீயிருக்க
பூமியும் நம்மிடையே பூவாய்பூத்து
நெடுநேரம் நம்மைபிரிக்க எப்படிஇயலும்?

நம்மிருவருக்கு மட்டும் கிரகணம்
நமக்குநாமே பிடித்த கிரகம்
உன்னுள் நிரந்தரமாக நீயென்னை
விழுங்கியிருக்க பின்னெப்படி சாத்தியம்?

வஞ்சமின்றி நஞ்சை உமிழும்
அரவமென்னை கொஞ்ச கொஞ்சமாய்
வாயில் கவ்விபிடித்தாலும் உன்னால்
உயிர்பெறும் நான்எப்படி மறைவேன்?
- sure

அப்படியென்ன பிடிக்காது...?

எனக்கு பிடிக்காதது
உனக்கு பிடித்திருக்கிறது...
உனக்கு பிடிக்காதது
எனக்கு பிடித்திருக்கிறது...
இருந்தாலும் நமக்குள்
ஒருவரை ஒருவர்
மிகவும் பிடித்திருக்கிறது..
அப்படியென்ன பிடிக்காதது...?
என்னை எனக்கு
பிடிக்கவில்லை...
உன்னை உனக்கு
பிடிக்கவில்லை...
- sure

என்னோடு நீ...

தமிழ் கவிதை
வான்மதியே!!!
என்னுடைய பகல்நேர
பேருந்து பயணங்களிலும்
என்னருகில் அமர்ந்து
எந்தன்தோள் சாய்ந்து
நீயில்லாத வானத்தை
என்னிடம் கண்ணில்காட்டி
காதில் ரகசியம்கூறி - விண்ணை
ரசிக்க சொல்ன்கிறாய்...
நான் நடந்துசெல்லும்
சாலையின் ஓரங்களிலும்
என்ஒற்றை விரல்பிடித்து
என்னோடு நடைபயில்கின்றாய்
சிலசமயம் உன்னிடையை
என்கைகள் வளைத்து
இதமாய் அரவணைத்து - நடக்கும்படி என்னை நீயே 
மாற்றுகின்றாய்....
நான் உண்பதற்கு
செல்லும் உணவங்களுக்கு
எனக்கு முன்னால்
போட்டியிட்டு செல்ன்கிறாய்...
உனக்கு பிடித்ததை
எனக்கும்..
எனக்கு பிடித்ததை
உனக்கும்...
கொண்டுவர சொல்லி
அன்போடு உணவையும்
ஊட்டிவிட்டும் ஊட்டிவிட - வார்த்தையில்
சொல்லியும் மகிழ்கின்றாய்...
வான் தொலைவில்
நீயிருக்கும் போதே
இத்தனை மாற்றங்களை
என்னுள் புகுத்துகின்றாய்...
என்னை காண்பதற்கு
ஒருவேளை பூமிக்கு
இறங்கி வந்தால் - என்னவாகி
போவேன் உன்னால்?

நான்... கண்களா? இமையா?

தோழியே!
உலகத்தை நீ பார்க்க
உண்மையான நட்பாய்
உனக்கு ஆயிரம்
கண்கள் இருக்கலாம்...

அதில் நானுனக்கு
வலதுகண்ணோ? இடதுகண்ணோ?
தெரியாது? ஒருவேளை
எத்தனை கண்கள்
இருந்தாலும் அத்தனை
கண்களை காத்திடும் இமையாகவே எந்நாளும் 
இருக்க ஆசைப்படுகிறேன்...

பெளர்ணமி நிலவே!!!

பெளர்ணமி நிலவே!!!
உன்னை நீயே
எனக்கு அறிமுகம்
செய்கிறாய்...
இன்று விண்ணைநோக்கு
உன்மனதில் இருக்கும்
என்னை காணலாம்
என்கிறாய்...

மொட்டைமாடியில் மதியை
இந்நாள்வரை நின்றுமட்டுமே
ரசித்திட்ட நான்...
முதல்முறையாய் வாழ்வில்
துகில்கொண்டே கண்டிட
எண்ணினேன் நான்...

வானத்து மங்கையே
உனக்கு துணையாக
நீயெனக்கு இணையாக
இருவரும் மகிழ்வோடு
கொஞ்சி மகிழ்ந்திடும்
நினைவுகளோடு நான்...

அரைநிர்வாண கோலமாய்
கைச்சட்டை இல்லாமல்
கையில் ஏடும்பேனாவும்
மனதில் கனவுகளையும்
கொண்டு காதல்புரிய
உன்னை காணவந்தேன்...

வெண்ணிலவே நீயும்
வெட்கம் கொண்டாயோ?
மேகமென்னும் சேலையின்
முந்தானையே எடுத்து
முகத்தினை மூடி
என்னைகாண மறுக்கிறாயே...

பாஞ்சாலியின் மானத்தை
காக்க சேலையை
கொடுத்தவன்...
உன்னுடைய நாணத்தை
மறைக்கவும் முகிலை
அனுப்புகிறானோ?

உனக்கு ஆடையை
வாரிதருவது அந்த
மாயகண்ணனின் லீலையோ?
என்மனத்துக்கு பிடித்த
பரந்தாமனும் இச்செயலால்
பிடிக்காமல் போகிறான்...
- sure

கனவாய் மறையாத நினைவுகள்...

இரயில் நிலையம் என்றாலே உந்தன் ஞாபகமே
இரயில் வண்டி பயணமென்றாலும் உந்தன் ஞாபகமே
இருக்கையில் சன்னலோரம் அமர்ந்தாலும் உந்தன் ஞாபகமே
இடமில்லாமல் கதவோரம் நின்றாலும் உந்தன் ஞாபகமே...

இருசக்கர வாகனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
இருவரும் ஒன்றாக பயணித்ததும் ஞாபகமே
இயற்கையை இருவர் ரசித்ததும் ஞாபகமே
இரவில் இன்னிசை கேட்டாலும் உந்தன் ஞாபகமே...

ஆலய தரிசனம் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆலயத்தில் பிரகாரம் வலம்வந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆண்டவன் அருள் என்றாலும் உந்தன் ஞாபகமே
ஆன்மாவை ஒருநிலை படுத்தினாலும் உந்தன் ஞாபகமே...

அதிகாலை என்றாலும் உந்தன் ஞாபகமே
ஐந்துமணிக்கு எழுந்தாலும் உந்தன் ஞாபகமே
ஆதியை கண்டாலும் உந்தன் ஞாபகமே - எந்தன்
அருகினில் நீயில்லாவிடினும் உந்தன் ஞாபகமே...

ஞாபகங்கள் தொடரும்...

- sure

தமிழ்

"என் தாயும் நீயே!
என் தோழியும் நீயே!
என் காதலியும் நீயே!
என் மனைவியும் நீயே!
என் சேயும் நீயே!
என் வாழ்வே நீயே!!!”
எனக்கு மட்டும் என்றில்லை
எத்தனையோ உள்ளங்களுக்கும்...
- sure

நண்பர்கள்..

இதயத்தில் இடம் கொடுப்பவர்கள் காதலர்கள்.
இதயத்தையே கொடுப்பவர்கள் நண்பர்கள்..
- sure

என்னுள் நடந்த

நீ பிரிந்த இந்த நொடி

என்னுள் நடந்தன சுனாமி

நீ பேசாத இந்த நொடி

என்னுள் நடந்தன பூகம்பம்

நீ எப்போது பேசுவாய் என்று

இந்த சுனாமியையும்

பூகம்பத்தையும்

தாங்கி கொண்டு நிற்கிறேன்...
- sure

உனக்காக காத்திருப்பதே

உன்னோடு பேசிய நாட்களை விட

உன்னை விட்டு பிரிந்த நாட்களே அதிகம்

உன்னோடு சிரித்த நாட்களை விட

உன்னை நினைத்து அழுத நாட்களே அதிகம்

உன்னோடு பழகிய நாட்களை விட

உன் நினைவுகளை நினைத்த நாட்களே அதிகம்

உனக்காக காத்திருப்பதே தனி சுகம்தான்....
- sure

யாராலும் உணர முடியாது

நில‌ம்
நீர்
நெருப்பு
காற்று
ஆகாய‌ம்

இது போல் தான் நம் ந‌ட்பு
யாராலும் உண‌ர‌ முடியாது
எப்ப‌டி தோன்றிய‌து என்று.....
- sure

கண்டுபிடிக்க முடியாது

உறையும் பனிக்குள்

எரியும் நெருப்பு

கண்டுபிடிக்க முடியாத

சரித்திரம்

உன் மனதைப் போல்

யாராலும் கண்டுபிடிக்க

முடியாது.....
- sure

உன்னை நினைக்கும் போது

வண்ணக் கனவுகள்

பல நினைவுகள்

சில உண்மைகள்

நடக்கும் நிஜங்கள்

கற்பனையின் சம்பவங்கள்

எதிர்பார்க்கும் நிகழ்வுகள்

தொலைந்து போகும் நியாபகங்கள்

மறக்காத சிந்தனைகள்

எழுதாத கவிதைகள்

இவை எல்லாம் விட

பெண்ணே உன்னை நினைக்கும் போது

இதயம் துடிக்கிறது

120 தடவை நிமிடத்திற்கு...
- sure

ஒளித்து வைத்த வார்த்தை

குமுறியது உள்ளம்

நெருடியது நெஞ்சம்

மலர்ந்தது மனம்

நீ என்னை திரும்பி பார்த்த போது

சொல்லி முடிக்கும் முன்

சொல்லாத வார்த்தையால்

சொல்லிச் சென்றாய்

இனிமேல் பார்க்காதே என்று

வீழ்ந்தது நினைவு

எரிந்தது கனவு

ஆறுதல் சொல்லியும்

ஆறாத நெஞ்சம்

இன்னும் உயிர் வாழ்கிறது

எதையோ தேடி

நீ ஒளித்து வைத்த வார்த்தையை !!!!!!
- sure

எழுதப்பட்ட விதி

கனவோடு சென்றாலும்

கரையாமல் சென்றாலும்

நினைவோடு வரும்

நீ கண்ட கனவு

முறையாகப் பேசினாலும்

முறையற்றுப் பேசினாலும்

முடிந்த பின் தெரியும்

முனைப்பான தெளிவு

எது வேண்டும் என்றாலும்

எது வேண்டாம் என்றாலும்

கடைசியில் கிடைப்பது

உனக்கு எழுதப்பட்ட விதி !!!!!!
- sure

மெளனம்

கல்லால் அடித்து கூட

உன்னை காயப்படுத்த முடியும் - ஆனால்

அது நீ சொன்ன

வார்த்தையை விட பெரிதாகாது !

கத்தியால் குத்தி கூட

உன்னை இரத்தம்

சிந்த வைக்க முடியும் - ஆனால்

அது நீ காட்டிய

மெளனத்தை விட பெரிதாகாது!

நீ சொல்லும் வார்த்தையை

மெளனத்தின் மூலம் அறிய

மெளன மொழியை கற்கிறேன்

மெளனமாக !!!!!!!!!!!!
- sure

எதுவும் இல்லாத இடத்திலும்

என்றோ வரும் என் பிறந்தநாளுக்காக

இன்றே அலைகிறாய் ஒரு பரிசு வாங்க

தேடிய இடமெல்லாம் கிடைத்தது

எனக்கு பிடிக்காதவை மட்டுமே

முகத்தில் தோன்றிய ஏக்கம்

முடிவில் சொன்னாய் எதுவும் இல்லையென்று

எதுவுமே இல்லாத இடத்திலும்

உன் அன்பு இருக்குமே எனக்காக மட்டும்....
- sure

எப்பொழுது வருவாய் நீ

உன் பிரிவைக் கண்டு

தவியாய் தவித்தேன்

என்னையே வெறுத்தேன்

உன் வரவையே நாடினேன்

உன் நினைப்பையே நேசித்தேன்

விநாயகரிடமும் சொல்லி விட்டேன்

எப்பொழுது வருவாய் நீ !!!!!
- sure

காதல்

இது காலத்தின்

விதி அல்ல

கல்லறையின்

முதல் அடி..
- sure

சிரிப்பின் சப்தம்

உன் சிரிப்பின் சப்தம்

என் காதில் இன்றும் கேட்கிறது

அந்த நிமிடம் திரும்பிப் பார்த்தேன்

நீ என் பக்கத்தில் இருந்தாய்

நிழலாக !!!
- sure

நிம்மதி

இதை யாரும்

தொலைக்கவில்லை

ஆனால் இன்று வரை

அனைவரும் இதைத்தேடிக்கொண்டே

இருக்கிறோம்!!!!!
- sure

அரசு

வருமுன் காப்போம் திட்டம்

வந்தபின் காக்கும் திட்டம்

வராத அளவிற்கு காப்புத் திட்டம்

அரசின் இந்த நற்செயலுக்கு கிடைத்தது

தினம் 100 பிணங்கள் ஒரு மாவட்டத்தில்...
- sure

முட்டாளின் சுயசரிதை

அன்று நான்

சேர்த்து வைத்த

10 பைசா

இன்று செல்லாமல்

போய்விட்டது...
- sure

அன்புத் தோழி

               நீ பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான்                

              உன்னையே முறைத்துப் பார்த்தேன்                            

                 நீ கேட்க வேண்டும் என்பதற்காகத்தான்                 

                    உன் பெயரை உரைக்கக் கூப்பிட்டேன்                   

       நீ என்னுடன் பேச வேண்டும் என்பதற்காகத்தான்       

                                    உனக்கு பிடித்தபடி நடந்தேன்                      

                 நீ படிக்க வேண்டும் என்பதற்காகத்தான்                 

                         இந்த கவிதையையே படைத்தேன்                        

                         படிப்பாயா என் அன்புத் தோழி!!!!!                        

கண்ணீர்த்துளி 2

அடிக்கடி அழ

ஆசைப்படுகிறேன்

நீ அதை

துடைப்பாய் என்று
- sure

கண்ணீர்த்துளி

மழை வரும் போதெல்லாம்

கதவை சாத்திவிடாதே

அது உன்னைத்தேடிவரும்

என்கண்ணீர்த்துளீயாக

கூட இருக்கலாம்...
- sure

உன் புன்னகை

யாராலும் மொழி பெயர்க்க

முடியவில்லை

ஆனாலும் புரிகிறது

உன் புன்னகை
- sure